'பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று குதிக்க போன நபர்'... 'பாய்ந்து போன தீயணைப்பு வீரர்'... நிஜ ஹீரோவின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரையில் பல கதாநாயகர்களை நாம் பார்த்து மெய்சிலிர்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் பல நிஜ ஹீரோக்கள் நமது கண்முன்பே இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரத்தைச் சேர்ந்த 45 வயது கணேசன் என்பவர், நில அபகரிப்பு பிரச்சனை தொடர்பாகச் சட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளார். ஆனால் அதில் உரியத் தீர்வு கிடைக்காததால் உண்ணாவிரம் இருந்துள்ளார். இறுதியாகத் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, பாளையங்கோட்டை மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த தகவல் குறித்து அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்கள். குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி கணேசனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொள்வது எதற்கும் தீர்வாகாது, உங்களின் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யலாம், என அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கணேசன் திடீரென குடிநீர்த் தொட்டியிலிருந்து கீழே குதிக்க முற்பட்டார். உடனே பாய்ந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், கணேசனை மடக்கிப் பிடித்துக் காப்பாற்றினார்.
இதையடுத்து அருகிலிருந்த தீயணைப்பு வீரர்களும் ஓடி வந்து கணேசனைத் தடுத்து நிறுத்தி, அவரை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்கள். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதிக்க முயன்ற நபரை உயிருடன் மடக்கிப்பிடித்துக் காப்பாற்றிய தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், மற்றும் வீரர்களை காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பாராட்டினார்கள். கணேசனைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பொதுமக்கள் பலரும் தீயணைப்பு வீரர்களின் செயலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
இதற்கிடையே இந்த வீடியோவை பதிவிட்டுள்ள தீயணைப்புத் துறை இயக்குநர், சைலேந்திர பாபு ஐபிஎஸ், ''உயிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்குத் தலைமை என்பதைவிடப் பெருமை என்ன இருக்க முடியும்''? என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உயிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்? Firemen save our lives; they are the real heroes. It is a great honour to be their Director. pic.twitter.com/VDX9r8Mgvb
— Sylendra Babu (@SylendraBabuIPS) August 16, 2020

மற்ற செய்திகள்
