"உங்க வீட்ல புதையல் இருக்கு"... 'பூஜை' ஒண்ண போட்டு... "உங்க குழந்தைய நரபலி குடுக்கணும்"... போலி சாமியார் பேச்சை நம்பி துணிந்த தந்தை... நள்ளிரவில் பகீர் கிளப்பிய 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை அடுத்த சடையமான்குளம் சேர்ந்தவர் பார்வதி (வயது 70). இவரது மகன் குமரேசன்.

குமரேசனுக்கு திருமணமாகி 7 வயதிலும், 5 வயதிலும், ஐந்து மாத கை குழந்தையாகவும், மொத்தம் 3 மகன்கள் உள்ளனர். இதில், மூதாட்டி பார்வதிக்கு மாந்த்ரீகம் தொடர்பாக அதிகம் நம்பிக்கை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த கிரான ராஜன் என்ற போலி சாமியாருடன் நீண்ட நாட்களாக பார்வதிக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. அதே போல, பார்வதி வீட்டிலும் அடிக்கடி நள்ளிரவு மாந்த்ரீக பூஜைகள் நடந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பார்வதி வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுத்து தர வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என கூறி கிரான ராஜன், பார்வதியிடம் இருந்து 2 லட்சம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு குமரேசன் வீட்டில் புதையல் எடுப்பதற்கான பூஜையை மேற்கொண்டுள்ளனர். பூஜைக்கு இடையே பலி கொடுக்க வேண்டி கறுப்புப் பூனை ஒன்றும், கோழி ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்போது, பலி கொடுக்க இருந்த பூனை தப்பித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. இதனால் குமரேசனின் ஐந்து மாத குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கிரான ராஜன் கூறியுள்ளார். இதற்கு பார்வதியும், அந்த சமயத்தில் குடி போதையில் இருந்த குமரேசனும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், குழந்தையின் தாய் ஒப்புக் கொள்ளாமல் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறியழுதுள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை பறிக்க மற்றவர்கள் முயற்சி செய்த நிலையில், அவர் குழந்தையை கொண்டு வீட்டிற்கு வெளியே தெருவில் வந்து கூச்சலிட்டுள்ளார்.
அப்போது, அவரது கூச்சலைக் கேட்டு அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் பார்வதி, குமரேசன் மற்றும் போலி சாமியார் கிரான ராஜன் ஆகியோரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். புதையல் கிடைக்கும் என்பதற்காக சொந்த குழந்தையையே தந்தை குடி போதையில் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
