'வீடியோ கால் பேசிய போது...' 'வெடித்துச் சிதறிய செல்ஃபோன்...' 'இளம் பெண்ணின் கண்களுக்குள் புகுந்த துகள்கள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தையுடன் ‘வீடியோ கால்’ பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் இளம்பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சுகுமார் என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி நேற்று காலை செல்போனில் வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் ‘வீடியோ கால்’ மூலமாக பேசிக்கொண்டு இருந்தார்.
செல்ஃபோனை சார்ஜரில் போட்ட படி அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனால் சூடான செல்ஃபோன் திடீரென வெடித்து சிதறியது. செல்போனின் உடைந்த பாகங்களின் துகள்கள், ஆர்த்தியின் கண்கள் மற்றும் காதுகளுக்குள் புகுந்தன. இதனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இரு கண்களுக்குள்ளும் துகள்கள் புகுந்து பாதிக்கப்பட்ட நிலையில் வலியால் துடித்த ஆர்த்தியை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
செல்போனை சார்ஜரில் போட்டு பேசிக்கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. செல்போன் வெடித்த சத்தம் கார் டயர் வெடித்தது போல் இருந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
