'சாமி, நீங்க கேட்ட பணம் கோழி ரெடி...' 'பில்லி சூனியம் தானே, எடுத்துருவோம்...' - மினி வேனை விற்று ஊர்ல இருந்து வந்தவருக்கு விபூதி அடித்த சாமியார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பில்லி சூனியம் எடுப்பதாக சொன்ன சாமியாரை நம்பி சென்னை வந்து 2 லட்சம் ரூபாயை இழந்துள்ளார் தென்காசியியை சேர்ந்த நபர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் 45 வயதான ராஜகுமாரன். சொந்தமாக மினி வேன் வைத்து, வாடகைக்கு ஓட்டி வரும் இவரின் குடும்பத்தினருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது ஏதாவது சாமி குத்தமாக இருக்குமா என்ற குழப்பத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ராஜகுமாரன் சில நாட்களுக்கு முன் தனது பகுதியில் ஒரு சாமியாரை சந்தித்தபோது தனது மனக்குறைகளை எல்லாம் கூறியுள்ளார். இதற்கு அந்த சாமியார், 'உனது குடும்பத்துக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்திருக்கின்றனர். அவற்றை எடுக்க, நீ சென்னைக்கு 2 லட்சம், 2 கோழி எடுத்துக்கொண்டு வா. அனைத்து பிரச்னைகளையும் சரி செய்துவிடுகிறேன்' எனக் கூறி சென்றுள்ளார்.
சாமியாரின் பேச்சை நம்பிய ராஜகுமாரன், தான் வைத்திருந்த மினி வேனை 5 லட்ச ரூபாய்க்கு விற்று, அதில் 2 லட்சம் எடுத்துக்கொண்டு சென்னை வந்துள்ளார். மேலும் சாமியார் சொன்னது போல உறவினர் ஒருவருடன் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை பகுதிக்கு வந்து இரு கோழிகளையும் வாங்கியுள்ளார்.
அதன்பின் சாமியாரை தொடர்புக் கொண்டு சென்னை வந்துவிட்டதாக தெரிவிக்கவே, சாமியார் வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு 2 லட்சத்தையும் மற்றும் 2 கோழிகளை பெற்றுக்கொண்டார். இதன்பிறகு பூஜை பொருட்களை வாங்கி வருவதாக சென்ற சாமியார் திரும்ப வரவில்லை. பல நேரம் காத்திருந்துவிட்டு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவீட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனையடுத்து ராஜகுமாரன் மற்றும் அவருடன் வந்த உறவினரும் அருகில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் இவர்களை ஏமாற்றிய சாமியார், கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி சுமார் 1 லட்சம் ரூபாயை ஏமாற்றியதும் தெரியவந்ததுள்ளது.

மற்ற செய்திகள்
