"என்னது!... 2021லயும் இதே நெலம தானா???"... 'ஐபிஎல் விதியால்'... 'CSKவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு நடப்பு சீசனிலுள்ள சிக்கல்களே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், இந்த சீசனில் இனி எவ்வளவு முயன்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்வது கடினமாகியுள்ளது. அணியில் இருக்கும் முக்கியமான வீரர்கள் அனைவரும் பார்ம் அவுட் ஆகியுள்ள சூழலில், பெஞ்சில் இருக்கும் வீரர்களும் பார்மில் இல்லை. நம்பிக்கை கொடுத்த வீரர்களும் தொடரில் இருந்தே வெளியேறியுள்ளதோடு, பவுலர்களும் பார்மில் இல்லை.
தற்போது சிஎஸ்கேவில் பார்மில் உள்ள ஒரு சிலர் மட்டுமே மொத்தமாக அணியை தூக்கி சுமக்க முடியாது என்பதால் சிஎஸ்கே மீண்டு வர முடியாத அளவுக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிஎஸ்கேவில் தற்போது நிலவும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க, முதலில் அணியில் பார்மிற்கு திரும்பாமல் பல போட்டிகளாக ஏமாற்றி வரும் கரன் சர்மா, ஜாதவ், சாவ்லா போன்றவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய திறமைகளை அணிக்குள் கொண்டு வருவதே ஒரே வழியாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம் வாட்சன் போன்றவர்கள் மீது இனியும் நம்பிக்கை வைக்காமல் புதிய ஒப்பனர்களை கொண்டு வர வேண்டும். இன்னொரு பக்கம் ஐபிஎல் அணிகளிலேயே ஸ்பின் பவுலிங்கிற்கு பெயர் பெற்ற சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங்தான் இந்த வருடம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் தற்போதுள்ள ஸ்பின் பவுலர்களை தூக்கிவிட்டு புதிய ஸ்பின் பவுலர்களை எடுக்க வேண்டும்.
அதாவது, தற்போது சிஎஸ்கேவில் உள்ள டு பிளசிஸ், ராயுடு, சாம் கரன், ஜடேஜா, சாகர், தோனி ஆகியோரை வைத்து விட்டு மற்றவர்களை மொத்தமாக நீக்கிவிட்டு புதியதாக பெரிய வீரர்களை, இளம் வீரர்களை கலவையாக எடுக்க வேண்டும். ஆனால் அடுத்த வருடம் பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் எதுவும் நடக்க போவது இல்லை என்பதால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை எனவே கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு பெரிய ஏலம் எதுவும் இல்லாததால் சில வீரர்கள் மட்டுமே பிற அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஐபிஎல் விதியின்படி அஸ்வின், பண்ட், ரபாடா, அர்ச்சர், சூரியகுமார் யாதவ் போன்ற பெரும்பாலான முக்கியமான வீரர்கள் அவர்களின் அணியால் ரீ டெயின் செய்யப்படுவார்கள். இப்படி பெரிய வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தங்கள் அணியிலேயே தக்க வைக்க உதவும் இந்த ரீ டெயின் எனப்படும் ஐபிஎல் விதியே தற்போது சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. இதனால் அடுத்த வருட ஏலத்தில் சிஎஸ்கே பெரிய அளவில் முக்கிய வீரர்களை அணியில் எடுக்க முடியாது என்பதால் இப்போது ஆடும் வீரர்களில் பெரும்பாலான வீரர்களை வைத்தே ஆட வேண்டும் என்ற சூழல் உள்ளதால் அந்த அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.