legend updated recent

'அப்பா சாகல'... 'என்ன ஆசீர்வாதம் பண்ணிட்டாரு'...'இறந்த தந்தையின் முன்பு திருமணம்'...நெகிழவைத்த மகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 10, 2019 11:57 AM

இறந்த தந்தையின் உடல் முன்பு ஆசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டது பலரையும் நெகிழ செய்துள்ளது.

Teacher married his girlfriend in front of his father body

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருடைய மகன் அலெக்சாண்டர். இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடன் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஜெகதீஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டு பெற்றோரும் ஒன்றாக பேசி, அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம் 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று திடீரென மரணமடைந்தார். அடுத்த மாதம் அலெக்சாண்டருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தெய்வமணி இறந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த  அலெக்சாண்டருக்கு இது பேரதிர்ச்சியை அளித்தது.

தனது தந்தையின் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணிய அலெக்சாண்டர், அது நடக்காமல் போக, தந்தை உடல் முன்பு தனது காதலியை திருமணம் செய்ய முடிவு செய்து உறவினர்களிடம் கூறினார். மேலும் தந்தையின் உடல் முன்பு ஜெகதீஸ்வரியை அலெக்சாண்டர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தனது விருப்பத்திற்கு, ஜெகதீஸ்வரி குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து தனது தந்தை தெய்வமணியின் கைகளில் தாலியை வைத்து ஆசிர்வாதம் பெற்ற அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். அப்போது அலெக்சாண்டர் உட்பட அவரது உறவினர்கள் பலரும் கதறி அழுதார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நெகிழ செய்துள்ளது.

Tags : #FATHER #MARRIAGE #TEACHER #VILLUPURAM