'மத்திய அமைச்சர் ஆகும் எல். முருகன்'... 'அடுத்த பாஜக தலைவர் யார்'?... அமைச்சர் பதவி தேடி வர காரணமாக இருந்த சபதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நேரத்தில் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டவர் எல்.முருகன்.
தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த சூழ்நிலையில் கறுப்பர் கூட்டம் குறித்து எழுந்த சர்ச்சையைக் கையில் எடுத்த முருகன், தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது பலரது புருவங்களை உயர்த்தியுள்ள நிலையில், முருகனுக்கு அமைச்சர் பதவி தேடி வந்ததன் பின்னணியில் ஒரு சபதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக முருகன் நியமிக்கப்பட்டவுடன், ''தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அலங்கரிப்பார்கள். அதைச் செய்து காட்டுவேன்'' எனச் சூளுரைத்துள்ளார். அதோடு நிற்காமல் வரலாற்றில் நடைபெறாத ஒரு நிகழ்வாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பா.ஜ.கவில் அதிரடியாக இணைந்தார்.
அதனைத்தொடர்ந்து திமுகவின் முக்கிய பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமியை பாஜகவுக்கு இழுத்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் முருகன். அதேபோல தேர்தல் வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கூட தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் பா.ஜ.கவில் இணைந்தார்.
தமிழகத்திற்குத் தேசிய அளவில் ஒரு முகம் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சியில் குஷ்பு வைத்திருந்த மனக்கசப்பைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.கவில் இணைக்க வேண்டும் என்று அதற்கான பணிகளைத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார் முருகன். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து கட்சியை வலுப்படுத்தினார். அதன் விளைவாகவே தமிழ்நாடு முழுவதும் 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.
அதேநேரத்தில் தாராபுரம் தொகுதியில் நின்ற பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தோல்வியுற்றார். ஆனால் தனது சபதத்தை நிறைவேற்றி தமிழக சட்டசபைக்குள் பாஜக உறுப்பினர்களைக் கொண்டு சேர்த்ததற்காக எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது. மேலும் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பாஜக தலைமை தெரிவித்துள்ளது.