'இந்தியா - இலங்கை தொடர் நடக்குமா'?.. இடியாக வந்த செய்தி!.. பதற்றத்தில் வீரர்கள்!.. கலக்கத்தில் கிரிக்கெட் வாரியங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இலங்கை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பதற்றத்தில் உள்ளன.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக கடந்த 28ம் தேதி கொழும்பு சென்றடைந்த இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான ஒப்பந்தத்தில் இலங்கை வீரர்கள் கையெழுத்திடுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. புதிய ஊதிய முறையில் ஏற்பட்ட அதிருப்தியில் வீரர்கள் இருப்பதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களுக்கு 8ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே இன்னும் தீராத நிலையில் கொரோனா சிக்கல் வந்து சேர்ந்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடிய இலங்கை அணி, நேற்று தான் நாடு திரும்பியது. ஆனால், அந்த தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாகிகள் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அணி மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின்னர் தான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை திரும்பியுள்ள அந்நாட்டு வீரர்கள் அனைவரும் தனித்தனியாக குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று இரவுக்குள் தெரியவரும் என்பதால் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் பதற்றத்தில் உள்ளனர்.
ஒருவேளை இலங்கை அணி வீரர் யாரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருந்தாலும் கூட இந்த தொடர் நடைபெறுவது சந்தேகம் தான். ஏனெனில், ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். ரிஸ்க் எடுத்து அவர்களுடன் விளையாட பிசிசிஐ-ம் ஒப்புக்கொள்ளாது எனத் தெரிகிறது.