'இங்க சாதி, மதம் தான் முக்கியம்,மனுஷன் இல்ல...' ப்ளீஸ் என் 'கடைசி ஆசையாவது' நிறைவேத்துங்க...! 'லெட்டர் எழுதி வைத்துவிட்டு...' இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் அருகே இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், `இந்தச் சமூகத்தில் சாதி, மதம்தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதில் எனக்கு நம்பிக்கையில்லை' என்று உருக்கமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பென்கர் என்ற இளைஞர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவருடைய அம்மா அருள் சகாயராணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பென்கர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்கர் எழுதிய கடிதத்தில், `அம்மா! நீங்கள் என்னை வளர்ப்பதற்கு எதிர்கொண்ட பிரச்னைகள், நீங்கள் எடுத்த முயற்சிகளை நான் நன்கு அறிவேன். என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். கடவுள் இருக்கிறார் என்பதை நான் எந்த வகையிலும் நம்பவில்லை என்பதை தர்க்கரீதியான மற்றும் உணர்வு நிறைந்த முழு உண்மைகளை மட்டுமே நான் நம்பினேன். குறைந்தபட்சம் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முயல்வீர்கள்.
இந்தச் சமூகம் மனிதனை பார்க்காமல் சாதி, மதம் பார்ப்பதால் நீங்களும் உங்கள் சொந்த மகனின் மகிழ்ச்சியைப் பார்க்கவில்லை. என் தரப்பை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நான் எடுத்த கெமிக்கல் ஒவ்வொரு உள் உறுப்புகளையும் சேதப்படுத்தும். எனவே, எஞ்சியதைப் மற்றவர்கள் பயன்பெற தானம் செய்யுங்கள். கண்கள் இதனால் பாதிக்கப்படாது. எனவே, கண்தானம் செய்யுங்கள்.. நான் வழக்கமாக ரத்ததானம் செய்து வருபவன். இதுவரைக்கும் மது அருந்தியதில்லை, புகை பிடித்ததில்லை. எனவே, என் உடலிலிருந்து தானம் செய்யக்கூடிய எதையும் பயன்படுத்த தயங்காதீர்கள். எஞ்சியவை மின்சார கல்லறையில் சாம்பலாக இருக்க வேண்டும். இதுவே எனது கடைசி ஆசை, இதையாவது நிறைவேற்றுங்க' எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் பயின்ற கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவனே கெமிக்கல் ஆசிட் கலந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
