'அண்ணனுக்கு 34 வயசு, இன்னும் கல்யாணம் பண்ணாம உங்களுக்காக கஷ்டப்படுறான்'... 'செங்கல் சுமந்து உன்ன படிக்க வச்சேனே'... இளம்பெண்ணிடம் கதறி அழுத தாய்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலனின் கரம் பிடித்த கல்லூரி மாணவியிடம் தாய் ஒருவர் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி கல்லூரியில் படித்து வரும் பவித்ரா, இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு தன்னுடைய நண்பரிடம் பாடம் சம்பந்தமாகச் சந்தேகம் கேட்பதாக அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் உடன் படிக்கின்ற கல்லூரி மாணவர் ஒருவரை பவித்ரா காதலித்து வரும் தகவல் அவரது தாய்க்குத் தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த அவரது தாய் பவித்திராவிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் பவித்ரா வீட்டிலிருந்து திடீரென மாயமாக, பதறிப்போன அவரது தாய் மகளைக் காணவில்லை எனக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவர் பீமாராவ் என்பவரின் கையை பிடித்துக் கொண்டு காவல்நிலையம் வந்த பவித்ரா, இவரைத் தான் நான் காதலிக்கிறேன், நாங்கள் மேஜர் என்பதால் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பவித்ராவின் தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒரு பக்கம் பவித்ராவின் அண்ணன், எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்று கொண்டிருந்தார். பவித்ராவின் தாயோ, செல்போனை உங்கிட்ட கொடுத்து விடுகிறேன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவனுடன் பேசிக்கொள் என்று கூறி தன்னுடன் வந்து விடும்படி மன்றாடிக் கொண்டிருந்தார். மேலும் 2 மாதத்தில் கல்லுரி இறுதி தேர்வு நடக்க இருக்கிறது. அது முடிந்ததும் நானே உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என பவித்ராவிடம் அவரது தாய் மன்றாடிக் கொண்டிருந்தார்.
அம்மா, அண்ணன், குடும்பம் மற்றும் படிப்பு என எதுவும் எனக்கு முக்கியமில்லை எனது காதலன் தான் முக்கியம் எனக் காதலனின் கையை இறுகப் பிடித்தவாறே தாயுடன் செல்ல மறுத்து அடம் பிடித்தார் பவித்திர. ஒருகட்டத்தில் தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழ ஆரம்பித்த அவர், நான் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற காரணத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று செங்கல் சுமந்து, வட்டிக்குக் கடன் வாங்கி படிக்க வைத்தேனே எனக் கதறி அழுதார்.
மாணவி பவித்ராவின் தந்தை பல வருடங்களுக்கு முன்பு வாத நோயால் வீட்டிலேயே முடங்கி விட, அவரது தாய் கட்டிட வேலைக்குச் சென்று பணம் ஈட்டியதோடு, அவரது அண்ணனும் வேலைக்குச் சென்று 4 சகோதரிகளையும் படிக்க வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அதையும் நினைத்து அழுத பவித்ராவின் தாய், மகனுக்கு 34 வயது ஆகிறது, ஆனால் சகோதரிகளை நன்றாகப் படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மகன் படும் கஷ்டத்தைக் கூறி அழுதார்.
ஆனால் எதையும் காதில் வாங்காத பவித்ரா, சற்றும் கலங்காமல் தனது காதலனின் முதுகிற்குப் பின்னால் சென்று நின்று கொண்டார். மேலும் இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் பிச்சையா பாண்டியனிடம், படிப்பு முடிந்த பின்னர் அதே இளைஞனுடன் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாத பவித்திர, காதலனுடன் அங்கிருந்து சென்றார்.