'வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் பாத்துட்டு '63 வயதில்' கல்யாணம்'... 'வலது காலை வைத்து வீட்டுக்குள் வந்த மணப்பெண்'... ஒரு நொடியில் கரைந்த மொத்த 'சந்தோசம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் என்பது அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் கடந்து ஒரு மகிழ்ச்சியான வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த சிறப்பான தருணம் சில மணி நேரம் கூட நிலைக்காமல் போனது தான் துயரத்தின் உச்சம். அப்படி ஒரு சோகமான சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய். 63 வயதான இவருக்கு, பல ஆண்டுகளாக பெண் தேடியும் எந்த பெண்ணும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் கல்யாணிடம் இருந்தது.
ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கை, மறுபுறம் தனது குடும்பத்தையும் கவனித்து கொள்ளும் கூடுதல் பொறுப்பும் கல்யாணிடம் இருந்ததால் அவரது திருமணம் தள்ளிக் கொண்டே போனது. தனக்கு 63 வயதானாலும் திருமணம் செய்து கொள்வதில் மட்டும் கல்யாண் பாய் உறுதியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை மணந்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயது பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனக்கு திருமணம் நடக்கப் போவதை எண்ணி கல்யாண் பாய் மற்றும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, கல்யாண் பாய் - லைலாபென் ரபரி ஆகியோரின் திருமணம், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்பின்னர், புதுமணத்தம்பதி வீட்டிற்கு மணமக்கள் சென்ற போது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
திடீரென மணப்பெண் லைலாபென் ரபரி சுருண்டு தரையில் விழுந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கல்யாண் பாய் மற்றும் உறவினர்கள் பதறிப் போயினர். உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் லைலாபென்னை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த கல்யாண், அதிர்ச்சியில் துடிதுடித்து போனார். திருமணம் செய்து கொண்டு வருவதற்குள் தனது மனைவி உயிரிழந்ததை அறிந்து கதறி அழுத கல்யாண், மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி உடலைத் தகனம் செய்தார்.
பல ஆண்டுகளாக திருமணம் தள்ளிக் கொண்டே போன நிலையில், ஒரு வழியாக 63 வயதில் கல்யாண் பாய்க்கு திருமணம் நடந்ததால், கல்யாணின் உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த கிராம மக்களும் மகிழ்ச்சியில் திளைத்த நிலையில், அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது மனதை நொறுக்குவதாக உள்ளது.

மற்ற செய்திகள்
