'தர்பாருக்கு மட்டுமல்ல.. அரசியல் தர்பாருக்கும் வெய்ட்டிங்!'.. ரசிர்கள் கொண்டாடும் ரஜினி பர்த்டே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 12, 2019 10:04 AM
இதுவரை இந்திய சினிமாவில் மட்டுமே தவிர்க்க முடியாத நபராக இருந்து, தற்போது தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத அதிசயமாக மாறி வரும் ‘அதிசய பிறவி’ என அவரது ரசிர்களால் பார்க்கப்படும் ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12.
1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினி, பகுதி நேரமாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தே, படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், அரசியலில் ஒரு முழு நேர அரசியல்வாதியின் பேச்சுக்குண்டான மதிப்பீடுகளே ரஜினியின் பேச்சுக்கும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆரை போன்றதொரு நல்லாட்சி தன்னால் கொடுக்க முடியும் என்று நம்புவதாகக் கூறியது, கலைஞர் மற்றும் எம்ஜிஆரின் அன்பைப் பெற்றதாக உணர்ந்த ரஜினி தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவருக்கான வெற்றிடம் உள்ளதாகக் குறிப்பிட்டது, காவி வண்ணம் பூசப்படும் முயற்சியில் இருந்து தானும் திருவள்ளுவரும் மாட்ட மாட்டோம் என்று பேட்டி அளித்தது, எடப்பாடி முதலமைச்சர் ஆவார் என அவரே எதிர்பார்க்கவில்லை எனினும் அதிசயம் நடந்தது; நாளையும் அதிசயம் நடக்கும் என என்று சமீபத்திய பேசியது உள்ளிட்ட ரஜினி கூறிய எல்லாமே வார்த்தையல்ல வைரல்கள்.
ரஜினியின் குரல் ஏதோ சமீபத்தில் மட்டும் அரசியல் களங்களில் கேட்பதான ஒன்று அல்ல. 1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகித்த திமுக கூட்டணிக்கு ரஜினி வெளிப்படையான ஆதரவினை அளித்தார். அந்த வருடம் அதிமுக-காங்கிரஸ் கூட்டணியை திமுக கூட்டணி வீழ்த்தி வென்றது. இந்த வெற்றிக்கு பின்னால் இருந்த ரஜினியின் சார்பு பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பிறகு எம்ஜிஆர் கல்லூரி விழாவில் ரஜினி அண்மையில் பேசிய பேச்சுதான், அவர் அரசியலுக்குள் வந்த பின்னரான முழு நீள அரசியல் பேச்சாக அமைந்தது.
இதேபோல் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தது முதல், காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை பாராட்டியது வரை பல்வேறு சூழ்நிலைகளிலும் தனது நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தார். அடுத்து ரஜினியின் தர்பார் படத்துக்காக காத்திருப்பது போலவே, ரஜினியின் அரசியல் தர்பாருக்கும் காத்திருப்பதாகக் கூறும் அவரது ரசிகர்களால், ரஜினியின் இந்த பிறந்த நாள் முக்கியமானதாக மாறியுள்ளது.
‘எது என்னவோ, அவர் அரசியலுக்கு வந்தாலும் வர்லேன்னாலும், நாங்க தலைவர் ஃபேன்ஸ்யா’ என்று சொல்லும் அவரது மானசீக தமிழ், இந்திய, ஜப்பானிய ரசிகர்கள், ரஜினியோடு சேர்ந்து ரஜினியின் இந்த பிறந்த நாளை #HappyBirthdayThalaiva, #HBDThalaivarSuperstarRAJINI உள்ளிட்ட ஹேஷ்டேகுகளின் கீழ் கேக் வெட்டியும், ஆடிப்பாடியும், மக்களுக்கு நலத்திட்டங்களை செய்தும் கொண்டாடினர். ரஜினியும் தனது பிறந்த நாளை கொண்டாடிய ரசிகப்பெருமக்களுக்கு நன்றி என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 12, 2019