‘ரஜினி - கமல் இணைந்தால்’... ‘இவர்தான் முதல்வராக வரணும்’... ஸ்ரீப்ரியா விருப்பம்... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 20, 2019 12:23 PM

கமல் 60 நிகழ்ச்சிக்குப் பின்னர், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பேச்சுக்கள் பெரும் பரபரப்பை கிளப்பிய உள்ளநிலையில், இருவரும் இணைந்தால், யார் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்று நடிகை ஸ்ரீப்ரியா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

sripriya speaks about cm candidate on rajinikanth and kamal

சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அளித்தப் பேட்டியில், ‘கடந்த 44 ஆண்டுகளாக நானும், ரஜினியும் இணைந்துதான் பயணிக்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக ரஜினியுடன் சோ்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் பயணிப்போம். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். இருவரின் கொள்கை ஒத்துப்போகுமா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

இதைத் தொடா்ந்து கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகா் ரஜினிகாந்திடம், கமலின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ என்றார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், ஆழ்வார்பேட்டையில் நடைப்பெற்றது. அப்போது, ‘மாற்று அரசியலை முன்னெடுக்க, இரு பெரும் பிரபலங்களும் இணைய வேண்டும் என்றால் இணையலாம். ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்பது என் விருப்பம். ஒருவேளை கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் இணைந்து வேறொரு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தினாலும், அவர்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம்’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

Tags : #RAJINIKANTH #KAMALHAASAN #MNM #SRIPRIYA