‘நீண்ட நாள் கனவு’... ‘ஸ்பெஷல் செல்ஃபி’... ‘பிறந்த நாள் பரிசு’... ‘நெகிழ வைத்த 20 நிமிடங்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 02, 2019 10:05 PM

கேரளாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

rajini holds leg of physically challenged man to wish viral

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் அனைவரையும் அசரடித்து வருகிறார். மாற்றுத் திறனாளி ஓவியரான இவர், சமீபத்தில் மகா புயலால் கேரளா பாதிக்கப்பட்டபோது, பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்தார். பிரணவிடம் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன், தனது கைகளால் அவரது கால்களை குலுக்கி பாராட்டினார்.

தொடர்ந்து பிரணவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பினராயி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பிரணவ் உடனான சந்திப்பு நெகிழ்சியாக இருந்தது என பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவருக்கு என் கால்களால் வரைந்த ஓவியத்தைப் பரிசளிக்க வேண்டும்' என்று பேட்டியளித்திருந்தார். பிரணவின் விருப்பத்தை தெரிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்திருந்தார்.

இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை, பிரணவ் சந்தித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பின்போது, பிரணவிற்கு சால்வை போட்டு ரஜினி வரவேற்றார். இதன்பின், பிரணவ் தனது கால்களால் ரஜினிக்கு கைகொடுக்க, அத்துடன் கால்களால் வரைந்த ரஜினி ஓவியத்தையும், அவருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். அவரிடம் எதிர்கால லட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்து இருக்கிறார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரஜினி, `எல்லாமே நல்லபடியா நடக்கும். என்னோட ஆதரவு எப்பவும் இருக்கும்' என்று கூறி தனது பெர்சனல் போன் நம்பரையும் ரஜினி பிரணவிடம் கொடுத்திருக்கிறார். இதன்பின் பிரணவ் தனது  கால்களால் ஸ்பெஷல் செல்ஃபி எடுத்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #RAJINIKANTH