'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு!'.. தேர்தல் அதிகாரியிடம் டிரம்ப் ரகசிய பேச்சுவார்த்தை!.. கசிந்தது ஆடியோ பதிவு!.. அமெரிக்காவில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது ஜனாதிபதியாக வருகிற 20–ந் தேதி பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் டிரம்ப், தேர்தல் முடிவுகளை மாற்ற இறுதி முயற்சி மேற்கொண்டதாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை கண்டுபிடிக்க கூறியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 6 ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான தேர்தல் வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றம் சரிபார்க்க உள்ள நிலையில், ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒரு மணி நேரம் பதிவாகியுள்ள இந்த ஆடியோவில் டிரம்ப், "நான் வெறும் 11,780 வாக்குகளைப் பெற விரும்புகிறேன்" என குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜார்ஜியா மாகாண செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுவதாக உள்ளது. அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
டிரம்புக்கு பதிலளிக்கும், ராஃபென்ஸ்பெர்கர், ஜார்ஜியா மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் சரியானவை என்று பதிலளிப்பதாக அதில் உள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பைடன், 74 தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்திருந்தார்.
அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.