10 வருஷம் ‘துப்புரவாளராக’ இருந்த ஆபிஸ்.. அதே இடத்துக்கு இப்படி வருவேன்னு நினைக்கவே இல்ல.. திரும்பி பார்க்க வைத்த பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிந்த பெண் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி (46). பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மாதம் ரூ.2000 சம்பளத்துக்கு பகுதி நேர துப்புவாளராக பணியாற்றி வந்தார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அவர் கடந்த 10 வருடங்களாக அங்கு துப்புரவு வேலை பார்த்துள்ளார். ஆனால் தற்போது அதே அலுவலகத்துக்கு அவர் பஞ்சாயத்து தலைவராக வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த பஞ்சாயத்து தலைவர் ஆனந்தவள்ளி,‘என் கணவர் பெயிண்டராக உள்ளார். எனது குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். இதுபோன்ற செயல்களை எனது கட்சியால் மட்டுமே செய்ய முடியும். நான் அதற்கு கடன்பட்டிருக்கிறேன். 2011ம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால் எனது கட்சி தலைவர்களும், நலம் விரும்பிகளும் புதிய பொறுப்பை ஏற்க என்னை தூண்டினர். என் பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கு பொறுப்பு அதிகமாகியுள்ளது. என் பகுதி மக்கள் அனைவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமைய நான் கடுமையாக உழைப்பேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தான் துப்புரவாளராக இருந்த அலுவலகத்தில் தலைவராக கையெழுத்து போட செல்லும்போது ஆனந்தவள்ளியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
கேரளாவில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் பலரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 7000-க்கும் மேற்பட்டோர் இல்லத்தரசிகள் என்பது கூடுதல் சிறப்பு. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் கார்ப்பரேஷன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.