தனியா இருக்கும் வீடுதான் ‘டார்கெட்’.. டவுசர், மங்கி குல்லா அணிந்து நோட்டமிட்ட ‘மர்மநபர்’.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டவுசர், மங்கி குல்லா அணிந்து தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து திருடி வந்த மர்மநபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக, தனியாக இருக்கும் பங்களா வீடுகளை குறிவைத்து மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிக்குமார் என்பவரின் வீட்டில் நுழைந்த இந்த மர்மநபர், கத்தியைக் காட்டி மிரட்டி சசிக்குமாரின் தாய் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த சுமார் 39 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சசிக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனை அடுத்து திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆரோவில் உள்ள சாலையோர தனியார் விடுதியில் திருட முயன்ற புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த ஒரு வருடமாக அப்பகுதில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பாலகிருஷ்ணன்தான் என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவியில் பதிவான உருவமும் இவர்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இவர் திருடும் நகைகளை வேலூரை சேர்ந்த ஆறுமுகம் விற்று கொடுத்தது தெரியவந்ததை அடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இரவு நேரத்தில் சவுக்கு தோப்பில் உடைகளை கழற்றி வைத்துவிட்டு டவுசர் மற்றும் மங்கி குல்லா மட்டுமே அணிந்து கொண்டு, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு உள்ளே சென்றுள்ளனர். வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பணம், நகைகளை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சுமார் 55 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்
