'ரோட்டுல கெடந்துச்சு சார்...' 'துப்பாக்கியோடு போலீஸ் ஸ்டேஷன் வந்த மூதாட்டி...' - விசாரணையில் 'அதிரடி' டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சியில் கைத்துப்பாக்கி சாலையில் கிடந்ததாக கூறி மூதாட்டி ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவத்தால் அவரின் மகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பொள்ளாச்சி அன்னூர் ஒட்டப்பிடாரம் பகுதியில் வசித்து வருபவர் 72 வயதான விஜயலட்சுமி என்ற மூதாட்டி. இவர் தனது பேரனுடன் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு கையில் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இது குறித்து விசாரிக்கும் இந்த துப்பாக்கி சாலையில் கிடந்ததாகவும் போலீசாரிடம் கொடுக்க வந்தோம் எனவும் பாட்டியும், அவருடன் வந்த சிறுவனும் கூறியுள்ளனர்.
ஆனால், பாட்டியின் பேச்சில் சந்தேகமடைந்த காவல்துறையினர்காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் பாட்டியையும் மற்றும் பாட்டியுடன் வந்த அவரின் பேரன் விஜய்யையும் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதால் அவர்களின் பின்னணியை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது தான் விஜயலக்ஷ்மி அவர்களின் மகன் செல்வன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் இந்த துப்பாக்கியையும் செல்வம் தான் வைத்திருக்கக் கூடும் எனவும், துப்பாக்கி, செல்வத்திடம் எப்படி வந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, பொள்ளாச்சி கிழக்கு, மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் செல்வத்தின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் தனிப்படை போலீசார் செல்வத்தை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.