"கணவர் உறவுகொண்ட பெண்களை பலாத்காரம் செய்ய, உத்தரவிட்ட பெண் பிரதமர்!" .. பாகிஸ்தான் வாழ் அமெரிக்க பெண் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருந்துவரும் நிலையில், பொருளாதார சூழலை சமாளிக்க முடியாமல், அங்கு ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு இணையாக சிந்தியா ரிச்சியின் பாலியல் சர்ச்சையும் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் கிளப்பியுள்ளது.

வலைதள எழுத்தாளரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஊடகப்பிரிவில் பணியாற்றியவருமான சிந்தியா ரிச்சி, 2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்துவருகிறார். இவர்தான் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 1967-ல் ஆரம்பிக்கப்பட்ட செல்வாக்கு மிக்க ஒரு கட்சிகளுள் ஒன்றுதான் பாகிஸ்தான் மக்கள் கட்சி. இந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ பின்னாளில் படுகொலை செய்யப்பட்டார். இவரது கணவரான ஆசிப் அலி சர்தாரிதான் தற்போது இக்கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர்மீதுதான் அமெரிக்க பெண்மணியான சிந்தியா ரிச்சி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுபற்றிய தனது ட்வீட்டில், ஆசிப் அலி சர்தாரியால் (பெனசீர் பூட்டோவின் கணவர்) பாலியல் உறவு கொண்ட, பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பெனசீர் பூட்டோ உத்தரவிடுவார் என்றும், ஆசிப் அலி சர்தாரியால் ஆட்சிகாலத்தில் ரஹ்மான் மாலிக் 2011-ம் ஆண்டு தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானியும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் சஹாபுதீனும் ஜனாதிபதி இல்லத்துக்குள் வைத்து தம்மை துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயுள்ள அந்தக் கட்சியின் தலைவர்கள், இந்த விவகாரம் குறித்து 'ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி' விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள யூசுப் ரஸா கீலானி, தன் மீதான இந்த களங்கத்துக்கு தமக்கு ரூ.100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிந்தியா ரிச்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, தாம் பிரதமராக இருந்தபோது சிந்தியா ரிச்சியைச் சந்திக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஃபேஸ்புக் பக்கத்தில் லைவில் தோன்றிய சிந்தியா ரிச்சி, தான் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாக உறுதிபடத் தெரிவித்தார். இதற்கான ஆதாரங்களாக ஸ்க்ரீன்ஷாட், டெக்ஸ்ட் மெசேஜ், ஆடியோ போன்றவை தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்
