இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...! எப்படியாச்சும் இந்த தடவ ஜெயிக்க வச்சிடுங்க...' - நூதன வழிபாடு செய்த பெங்களூர் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை இந்த முறையாவது வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 13 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்கள் முடிந்து உள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒரு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது.
இந்தநிலையில், கிங்ஸ் லெவன்ஸ் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இதுவரை கோப்பையை கைப்பற்றியது இல்லை. அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி, மிஸ்டர் 360 டிகிரி எனப்படும் டிவில்லியர்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஐ.பி.எல். கோப்பை வெறும் கனவாகவே உள்ளது.
ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் வருவதும், பின்னர் ஏதாவது ஒரு கட்டத்தில் சொதப்பி தோல்வியை சந்தித்து வெளியே செல்வதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிலையாக உள்ளது. பெங்களூரு அணி ரசிகர்களும் ஆண்டுதோறும் கோப்பையை வெல்ல முடியாத போது அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமும் சமீபத்தில் முடிந்து உள்ளது. இந்த வருடமாவது ஐ.பி.எல். கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் கோவில்களில் வேண்டி வருகின்றனர். இதுபோல பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டி ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர்.
சித்ரதுர்கா டவுனில் தெருமல்லேசுவரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். அப்போது தேர் மீது நாம் நினைக்கும் காரியத்தை வாழைப்பழத்தில் எழுதி வீசினால் அது நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் நேற்று தெருமல்லேசுவரா கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெங்களூரு அணி ரசிகர்கள், இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த முறையாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணி கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று வாழைப்பழத்தில் எழுதி தேர் மீது தூக்கி வீசி நூதன வழிபாடு செய்தனர்.