'ஊரடங்க நீட்டிக்குறது எல்லாம் ஓகே'... "ஆனா மக்கள் கேட்டத எப்போ சார் பண்ண போறீங்க?"... 'பிரதமரிடம்' கேள்விகளை அடுக்கிய 'ப. சிதம்பரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 14, 2020 02:25 PM

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருந்த போதும் கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்த பாடில்லை. இதனையடுத்து இன்று காலை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கை இன்னும் 19 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

P. Chidambaram criticizes Modi announcement to extend lockdown

இந்நிலையில் மோடியின் அறிவிப்பு குறித்து தனது கருத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 'பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் ஊரடங்கு நீடிக்கப்பட்ட அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பிரதமரின் அறிவிப்பில் ஏழைகளுக்கான வாழ்வாதார பிரச்சனை குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை. அதே போல தமிழக முதல்வரின் நிதி சார்ந்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

இது குறித்து மேலும் அவரது ட்விட்டர் பதிவில், 'பல நிபுணர்கள் பிரதமரிடம் அறிவுறுத்திய காரியங்கள் ஒன்றும் மோடி தெரிவிக்கவில்லை. அரசிடம் உணவும், பணமும் உள்ளது. ஆனால் அதை கொண்டு மக்களுக்கு உதவி செய்யவில்லை. என் அன்பிற்குரிய நாட்டுக்காக அழுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் கூறுகையில், 'மக்கள் பிரதமரிடம் இருந்து அறிவுரைகள் மட்டும் எதிர்பார்க்கவில்லை. அரசிடம் தங்களுக்கு தகுந்த நிவாரண உதவியும் வேண்டுகின்றனர். ஆனால் அது குறித்து பிரதமர் எதையும் தெரிவிக்கவில்லை' என குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மோடியின் உரை குறித்து கூறுகையில், 'ஏழை மக்களின் பசியைப் போக்க வழிகள் எதுவும் பிரதமர் தெரிவிக்கவில்லை. தினசரி தொழிலாளர்களுக்கான வழிமுறைகள் எதையும் செய்யாமல் அரசு செய்ய வேண்டிய கடமையை தவறியுள்ளது' என கூறியுள்ளார்.