'முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனை நிறைவு...' 'ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்ததாக தகவல்...' 'அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 11, 2020 05:19 PM

நாடுமுழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் நரேந்திரமோடி முடிவெடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

PM Modi decision to extend curfew-Kejriwal tweeted

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி ஆலோசித்தார்.

ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடுமுழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளது சரியான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளார். மேலும், "பல வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலைமை , இன்று மேம்பட்டே இருக்கிறது. ஏனெனில் ஊரடங்கு நடவடிக்கையை நாம் முன்னதாகவே தொடங்கி விட்டோம். இதனை நாம் நிறுத்தி விட்டால் நமக்கு கிடைத்த பலன்கள் பறிபோய் விடும். கிடைத்த பயனை நாம் முழுமையாக பெற வேண்டுமென்றால் ஊரடங்கு நடவடிக்கையை தொடருவதே ஒரே வழி. ’’ எனக் கூறியுள்ளார்.