‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’.. பைக்கை வெளியே நிறுத்தவே பயமா இருக்கே.. சென்னையில் நடந்த நூதன திருட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நூதன முறையில் விலையுயர்ந்த பைக்கை மர்மநபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 1வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் விஷால் (27). இவர் தரமணியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தே விஷால் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு இவரது வீட்டின் கீழ் பகுதியில் அவரது விலை உயர்ந்த KTM பைக்கை நிறுத்தி வைத்திருந்துள்ளார். அப்போது நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தான் ஓட்டிவந்த பைக்கை அங்கு நிறுத்திவிட்டு, விஷாலின் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள கேடிஎம் (KTM) பைக்கை திருடி சென்றுள்ளார். இவை அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்காததால் அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மர்மநபர் விட்டுச் சென்ற பைக் மற்றொரு இடத்தில் திருடியது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.