'போலிஸ் ஸ்டேசன்ல நிப்பாட்டியிருந்த பைக் எப்படி காணாம போகும்...? 'அதுக்கு பின்னாடி இருந்த மர்மம்...' - விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திடீரென காணாமல் போனது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்டேஷனில் பணியாற்றிய பெண் காவலர் திருடியது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக பெண் போலீஸ் கிரேசியா என்பவர் பிடிபட்டுள்ளார். திருட்டுப் போன பைக்கின் உரிமையாளரான மதன்ராஜ் என்பவர் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனிடம் புகார் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், ``தீபாவளி தினத்தன்று நானும் எனது உறவினரும் மது விற்பனை செய்யப்பட்ட இடத்தின் அருகே நின்றபோது, கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் எங்களிடம் இருந்து இரு பைக் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தார்கள்.
என் உறவினரின் பைக் மற்றும் செல்போன் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில், என்னுடைய செல்போன், பைக் ஒப்படைக்கப்படவில்லை. தொடர்ந்து பல முறை கேட்டும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” எனக் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி-யை அணைத்து வைத்துவிட்டு திருட்டு நடந்திருந்ததால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அன்று பணியில் இருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், பெண் காவலரான கிரேசியா என்பவர் சிக்கினார்.
கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைப் பெண் காவலரான கிரேசியா, தான் பணியில் இருக்கும்போது ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைத் தன் கணவர் அன்புமணியின் உதவியுடன் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெண் காவலர் கிரேசியா, அவரது கணவர் அன்புமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மற்ற செய்திகள்
