மொதல்ல 'ஜன்னல்' வெளிய நின்னு 'டார்ச்லைட்' அடிப்பாங்க...! 'கன்ஃபார்ம் பண்ணின அடுத்த செகண்டே...' - சிசிடிவியில் தெரிய வந்த 'அதிர' வைக்கும் காட்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.

செம்பனார்கோவில் அருகேயுள்ள விளநகரில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் மர்ம நபர்கள் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிப்பதற்காக வலைவீசி தேடிவந்தனர். கொள்ளை நடந்த வீடுகளின் அருகேயுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அந்த வீடியோவில், பூட்டியிருக்கும் வீடுகளை முதலில் தேர்வு செய்து, நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும், கையில் ஒரு டார்ச்லைட் உதவியுடன் வீட்டில் எவரேனும் உள்ளார்களா என ஜன்னல் வழியாக உறுதிசெய்த பின்னரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மயிலாடுதுறை கல்லறைத்தோப்பு தெருவை சேர்ந்த மருது என்கிற விஜயபாஸ்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகம் (44) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் இவரிடமிருந்து 256 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ எடை கொண்ட இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், மேலும் திருட செல்வதற்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
