திடீர் டெல்லி பயணம்!.. பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், திமுகவின் தங்கபாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார்.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதிலும் குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், "மோடி தான் எங்கள் டாடி" என்றும், "பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது" என்றும் பேசி பரபரப்பை கூட்டினார். அதுமட்டுமின்றி, ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போதே பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பாஜகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் தங்கி இருக்கிறார். அவர் நாளை கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்திக்கிறார். இந்த நிலையில் தான், ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஏனெனில், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு வேகம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும், ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட போது, "யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. மாற்றத்தை கொடுக்க நினைப்பவர்கள் பாஜகவில் இணையலாம். பாஜகாவில் யார் இணைந்தாலும் மகிழ்ச்சி தான். தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவிற்கு வரவும். கட்சிக்குள் பிரச்சினை இருக்கும் போது சிலர் பாஜகவிற்கு வருகிறார்கள். மக்களுக்கு வேலை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கும்" என்று பதிலளித்தார்.