‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
முகப்பு > செய்திகள் > உலகம்பெரு நாட்டில் தடையை மீறி இரவு விடுதியில் மது குடித்துவிட்டு ஆட்டம் போட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
பெரு நாட்டில் 5 லட்சத்து 76 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 ஆயிரம் பேர் இறந்துமுள்ளனர். இதனால் பெரு நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் இரவு விடுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு விடுதி ஒன்றில் 120க்கும் மேற்பட்டவர்கள் மது குடித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் மது விருந்தில் பங்கேற்றவர்களை கைது செய்ய அந்த விடுதிக்கு போலீசார் விரைந்தனர். போலீசாரை கண்டதும் மக்கள் தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பெண்கள் உட்பட 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதை தவிர, அங்கிருந்தவர்களே போலீஸாருடன் இணைந்து மீதமிருந்தவர்களுக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் நிலை உண்டானது.
பலியானவர்களின் உறவினர்கள் போலீசார் கண்ணீர்புகை செய்ததால்தான் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பெரு நாட்டின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியதை பெரு நாட்டின் சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனிடையே பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என அரசு தரப்பில் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.