‘ஜல்லிக்கட்டுக்கு வந்த இளைஞர்கள் இந்த தேர்தலில் இத செய்யணும்’.. திருமுருகன் காந்தி ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 09, 2019 11:13 AM

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May17 Thirumurugan Gandhi Emphasis to ignore BJP in Lok sabha election

பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலம் முதலே, இன்றுவரை நாங்கள் கருப்புக்கொடி காட்டியிருக்கிறோம். பாஜகவின் அனைத்து தேசவிரோத செயல்களை மே 17 அம்பலப்படுத்தி உள்ளது. நிர்மலா சீதாராமன், உலக வர்த்தக வங்கியில் பேசியதற்கு மாறாக ரேஷன் கடைகளை மூடியதையும், ஹைட்ரோகார்பன் திட்டம், கருப்பு பண ஒழிப்பு சில்லறை வணிகத்தை ஒடுக்கும் திட்டம் என்றும், ஜிஎஸ்டி கொண்டுவந்தபோது மாநில உரிமைகளை வழிக்கும் விதமாக இந்த வரியை கொண்டுவந்ததாக நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

இதேபோல் கடற்கரை மேலாண்மை, விவசாயம், புதிய கல்விக்கொள்கை, மின்சாரம் மற்றும் பண்பாட்டுத் தளத்திலும் இவர்களின் போக்குகளை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. முக்கியமாக பாஜகவின் தமிழர் நில விரோதப் போக்குகளை ஜல்லிக்கட்டு உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களிலும், பேரிடர் காலங்களிலும் தொடங்கி அம்பலப்படுத்தியுள்ளோம். பாஜகவின் பொருளாதார- சமூக விரோத - பண்பாட்டுக் கொள்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளோம். இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களையும், சுதந்திரமான அரசியல் சாசன நிறுவனங்களையும் அழித்துள்ளது, இதன் பிறகு இந்த  ஆட்சிமுறை முழுவதுமாக ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை நோக்கி நகர்ந்துவருகிறது.

இந்தியாவில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே தேர்தல் அமைப்பது என்பது தேசவிரோத போக்கு. ஒருவேளை ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது மத்தியில் ஆட்சி கவிழ்ந்தாலோ ஆளுநர் ஆட்சி என்கிற சர்வாதிகார ஆட்சிதான் அமையும். ஜெர்மனியில் ஹிட்லர் இதையேச் செய்து தேர்தல் முறைகள் அல்லாத, ராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட ஆட்சியாளராக ஹிட்லர் மாறினார். ஆனால் இங்கு தேர்தல் ஆணையம் பாஜக மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய ராணுவம் என்பதை மோடியின் ராணுவம் என்று சொல்லும்போதே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் நாளை ராணுவ ஆட்சிமுறையை கையில் எடுக்கவிருக்கிறார். இந்த தேர்தல் அறிக்கையில் எந்தவிதமான இந்திய பொருளாதார திட்டத்தை ஆய்வுப்பூர்வமாக முன்வைக்கவில்லை. கல்வியை பொருத்தவரை, ஜிடிபியில் 3.4% செய்யப்பட்ட செலவு மோடி அரசால் 2% மாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 6% ஒதுக்கப்பட வேண்டும் என்று 30 வருடத்துக்கு முன்பாகவே முடிவுசெய்யப்பட்டது. ஆனால் அதே சமயம் இந்தியா முழுவதும் அறிவியல், பிற துறைகளை வளர்ப்பது பற்றி சொல்லாமல், சமஸ்கிருதத்தை வளர்ப்பது பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். விவசாயிகள் சம்மந்தப்பட்ட கொள்முதல் விலை உள்ளிட்ட எவ்வித புள்ளிவிவரங்களையும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கவில்லை. அதே சமயம் பாரத் மாலா, சாகர் மாலா திட்டங்களை நிறைவேற்றும் வகையில் விவசாயத்தை அழித்து சாலைவிரிவாக்கம் செய்கிறார்கள். வெளியுறவுக் கொள்கையிலும் மீனவர்கள் பற்றி பேசாமல், மோடி பேசுவதை போலவேத்தான் அந்த அறிக்கையில் இருக்கிறது.

தவிர தோல்வித் திட்டங்களான மேக்-இன் - இந்தியா, டிஜிட்டல் இந்தியாவை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கான எந்த திட்டமோ, அல்லது கவனத்துக்கு கொண்டுவருவோம் என்கிற வாக்குறுதியைக் கூட அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த பாஜகவை ஆதரிக்கவும் சட்டவிரோதமான அதிமுக அரசு தமிழின விரோத பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இந்த அரசு ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்பது எங்கள் கோரிக்கை. தமிழ்நாட்டில் பாதிக்கும் அதிகமான மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் ஆளுநர் ஏழு தமிழர் விடுதலையைச் செய்ய ஒப்புதல் அளிக்கவில்லை. இங்கிருக்கும் மாநில அரசும் அதற்கான அழுத்தத்தை தரவில்லை. இதைச் செய்யாத பாஜகவை நம்பி ஆட்சியை ஒப்படைத்தால் நம் சந்ததிக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகம்.

குறிப்பாக, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் மத்திய அமைச்சர்கள்-இந்துத்துவ-பாஜக நபர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே சமயம், இந்தியா முழுவதும் இருக்கு  முன்னாள் நீதிபதிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அத்தனை பேரும் பாஜகவின் ஆட்சியை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்தே நாங்களும் இதே நிலைப்பாட்டை முன்னெடுக்கிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்த இளைஞர்கள் அத்தனை பேரும் இந்த கூட்டணியை அதிகாரத்தில் இருந்து அகற்ற, புறக்கணிக்க பிரச்சாரம் செய்யுங்கள்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BJP #NARENDRAMODI #THIRUMURUGANGANDHI