'யாருமே ஓட்டு கேட்டு வர்ல!'... ஒவ்வொரு வாக்கும் முக்கியமாக இருக்கும்போது இப்படி ஒரு கிராமமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 08, 2019 06:37 PM
மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை ஒரு வேட்பாளர் கூட வாக்கு கேட்டு போகாத மலைகிராமம் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடையில், தேயிலைப் பயிரிட்டு தொழில் செய்து வாழ்ந்து வரும் மாஞ்சோலை மலைகிராம மக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக மாஞ்சோலை 4 வார்டுக்குள் வருவதால், இந்த 4 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 2,500 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
முறையான போக்குவரத்து வசதிகளும், அந்த போக்குவரத்துக்குண்டான சீரான சாலையமைப்புகளும் இல்லை என்று குற்றம் சாட்டும் இந்த கிராமத்தினர், மக்களவைத் தேர்தலில் தங்களிடம் வாக்கு சேகரித்தோ, அல்லது தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி கொடுக்கவோ யாருமே வரவில்லை என்றும், குறைந்த பட்சம் எந்த கட்சி அல்லது எந்த சின்னம் என்றுகூட தெரியாததால் யாருக்கு வாக்களிப்பது எந்த சின்னத்தில் வாக்களிப்பதும் என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் திணறி வருவதாக கூறப்படுகிறது.
தேயிலை உற்பத்தி நிறுவனத்தை சார்ந்த குடியிருப்புகளில் வசித்து வரும் இந்த மக்கள், தங்களுக்கென்று நிரந்தர வீட்டினை கட்டித் தருமாறும், தங்களது கோரிக்கைகளை கேட்டறிந்து யாரேனும் வாக்கு கேட்க வந்தால் மட்டுமே வாக்களிக்கவுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 100% வாக்கினை அரசு வலியுறுத்தி வரும்போது, யாரும் வாக்கு கேட்டு வராத இப்படி ஒரு கிராமமே இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
