‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 08, 2019 12:36 PM
நாடாளுமன்றத் தேர்தலுக்கான, தேர்தல் பணிகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது வழக்கம்.
ஆசிரியர்களின் பணி அனுபவம், வயது, தேர்தல் சிறப்புப் பணி அனுபவம் முதலான பல காரணிகளையும் கருத்தில் கொண்டு எலக்ஷன் டியூட்டி எனப்படும் தேர்தல் அலுவல் பணிகளில் அவரவருக்கான பணிகளை தேர்தல் ஆணையம் அளிக்கும். பின்னர், தேர்தல் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முன் கூட்டியே நடத்தப்படும்.
தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடியில் யார் யாருக்கு என்ன பணிகள், எப்படி பணிகளை பிரித்துக்கொள்வது, திடீர் இடர்ப்பாடுகளையும், பற்றாக்குறைகளையும் எப்படி சமாளிப்பது, திடீர் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பலவற்றிற்குமான பயிற்சி வகுப்புகள் நிகழும். இந்நிலையில் அப்படி இந்த மக்களவைத் தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பின்போது, திருச்சியைச் சேர்ந்த ஆசிரியை நித்யா நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளது சக ஊழியர்களையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சேலம் மாவட்டம் தேவனூர் நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்துவந்த நித்யா, அயோத்தியா பட்டிணத்தில் நிகழ்ந்த தேர்தல் பயிற்சி வகுப்பின்போது மயங்கி விழுந்துள்ளார். சக ஆசிரியர்களும் அதிகாரிகளும், உடனே நித்யாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஆசிரியை நித்யா ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.