மாண்டஸ் புயல்: 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தம்.. 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதையடுத்து 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன முதல் அதிக கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்.

மற்ற செய்திகள்
