"ப்ளீஸ் என்னை பாஸ் பண்ணிவிட்ருங்க".. விடைத்தாளில் பணம் வச்ச மாணவன்.. திருத்தும்போது ஷாக் ஆகிப்போன ஆசிரியர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தன்னை தேர்வில் தேர்ச்சி பெற செய்யுமாறு ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்ததோடு, விடைத்தாளில் பணத்தையும் வைத்திருக்கிறார். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வில் ஒரு மாணவர் இந்த செயலை செய்திருக்கிறார். அவர் இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளில் தன்னை தயவு செய்து தேர்ச்சி பெற செய்யும்படி எழுதியதுடன், இரண்டு விடைத்தாளிலும் தலா 500 ரூபாய் நோட்டை வைத்து உள்ளார். இதனையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில், அந்த மாணவனது விடைத்தாள்களை கண்ட ஆசிரியர் திகைத்துப்போயிருக்கிறார். இதனையடுத்து மேலதிகாரிகளிடம் அவர் புகார் அளிக்கவே மாணவன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.
ஒரு வருடம் தடை
விடைத்தாளில் பணம் வைத்த மாணவனுக்கு அடுத்த வருடம் தேர்வு எழுத தடை விதிப்பதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது மேலும், அந்த இரண்டு தேர்விலும் மாணவனை பெயில் ஆக்கியுள்ளது கல்வித்துறை. இதுபற்றி விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் மாணவனை விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர்,"அந்த மாணவன் தான் நன்றாகவே தேர்வுகளுக்கு படித்ததாக கூறினான். ஆனால், விடைத்தாளில் பணம் வைத்து அனுப்பினால் பாஸ் செய்துவிடுவார்கள் என யாரோ சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர். இந்த மாணவனும் அதனை நம்பி விடைத்தாளில் பணத்தை வைத்திருக்கிறார். ஆனால், இது பிரச்சனையாகும் என தனக்கு தெரிந்திருக்கவில்லை என அந்த மாணவர் கூறினான்" என்றார்.
நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்த அந்த மாணவர் தனது பெற்றோரிடம் பணம் பெற்று உள்ளூரில் டியூஷனுக்கு சென்று வந்திருக்கிறார். தன்மீது நம்பிக்கை குறைந்ததால் மாணவர் இப்படியான செயலில் இறங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே அந்த மாணவர் சுயமாக தேர்வை எழுதியிருந்தாலே நிச்சயம் தேர்ச்சி பெற்றிருக்கலாம் எனவும், வதந்திகளை நம்பி தவறான முடிவெடுத்துவிட்டதாகவும் மாணவனை விசாரித்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
