யாசகம் பெறுபவர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல்.. சொந்த பணத்தை வச்சு 50 குழந்தைகளை காப்பாற்றும் காவல்துறை அதிகாரி.. குவியும் பாராட்டுகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் யாசகம் பெறுபவர்களின் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கல்வி மட்டுமே நிலையான செல்வம். எத்தனை துயரங்கள் வந்தாலும் கல்வியை கைவிட கூடாது என்பதை நம்முடைய பண்டைய இலக்கியங்கள் தீர்க்கமாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் காவல்துறை அதிகாரியான ரஞ்சித் யாதவ்.
கல்வி
உத்திர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் யாதவ். இவர் உள்ளூரில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக யாசகம் பெறுபவர்களின் குழந்தைகளை தனது பள்ளியில் சேர்த்திருக்கும் ரஞ்சித், அவர்களுக்கு சிறப்பான முறையில் பாடங்களை நடத்தி வருகிறார். இவரது முயற்சிக்கு மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் இதுபற்றி பேசுகையில்,"இங்கு வருவது எங்களுக்கு பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறோம். இங்கே நல்ல முறையில் படித்து பள்ளிக்கு செல்லவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
கோரிக்கை
ரஞ்சித் யாதவ் ஒருநாள் சாலையில் குழந்தைகள் யாசகம் கேட்பதை பார்த்திருக்கிறார். அப்போது அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் சென்று இதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போது வசதி இல்லாததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் உதவி கிடைத்தால் நிச்சயம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தனது சொந்த பணத்தை கொண்டு மரத்தடி பள்ளிக் கூடத்தை துவங்கியுள்ளார் ரஞ்சித்.
அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு பேனா, நோட்டு மற்றும் புத்தகம் ஆகிய பொருட்களையும் தனது சொந்த பணத்தில் வாங்கிக் கொடுக்கிறார் ரஞ்சித். தற்போது இவருடைய பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். பணி முடிவடைந்ததும் பள்ளிக்கு செல்லும் இவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒவ்வொரு விடுமுறையிலும் குழந்தைகளை காண ஓடோடி செல்கிறார் ரஞ்சித். இவருடைய இந்த முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.