நான் ராணுவ அதிகாரி... பிரபல ஆன் லைன் தளத்தில்... வந்த விளம்பரத்தால்... சென்னை இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 09:31 PM

OLX தளம் மூலம் ராணுவ அதிகாரி எனக் கூறி, நம்ப வைத்து சென்னை இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Cheated, Chennai Young Man through OLX Advertisement

ஆன் லைன் விற்பனை இணையத்தளமான OLX-ல் பர்மிள் குமார் என்பவர் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அதில், சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகவும், பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் தான் பயன்படுத்திய ராணுவ இருசக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியிருந்தார். இதனைப் பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர், ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்று எண்ணி பர்மிள் குமாரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது அவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதை உறுதி செய்யும் வகையில், ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மளிகை பொருள்களுக்கான அடையாள அட்டை, மது பானம் வழங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் ராணுவ சீருடையுடன் கையில் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்கள் ஆகியவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு, பர்மிள் குமார் அனுப்பியுள்ளார். இதனை நம்பிய பாலமுருகன், ராணுவ இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முதல் தவணை தொகையாக 5,000 ரூபாயை பர்மிள் குமாரின் கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அந்த தொகைக்கு ராணுவ முத்திரையுடன் கூடிய ரசீதை பாலமுருகனுக்கு, பர்மிள் குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்த ரசீதை பார்த்த பால முருகனுக்கு முழு நம்பிக்கை வந்துள்ளது. மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்ஃபோனை பார்த்தபோது  பாலமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் அவரது கூகுள் பே கணக்கில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலமுருகன் தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை அறிய நண்பர் ஒருவரின் செல்ஃபோன் மூலம் முயன்றுள்ளார்.

நண்பரின் செல்ஃபோனில் இருந்து பர்மிள் குமாரை OLX மூலம் தொடர்பு கொண்ட போது, தனக்கு அனுப்பிய அடையாள அட்டைகளை நண்பரின் செல்ஃபோன் நம்பருக்கும் அனுப்பியிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். ராணுவ வீரர் என்ற பெயரில் பர்மிள் குமார் மோசடி செய்தது தெரிய வந்ததுடன், இதேபோல் அவர் 8 பேருக்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய அதிர்ச்சித் தகவலும் பாலமுருகனுக்கு தெரிந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தவரின் உண்மையான பெயர் பர்மிள் என்பதுதானா, அவர் அனுப்பிய புகைப்படங்கள் யாருடையது என விசாரணை நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இதேப் பெயரில், தான் ராணுவ வீரர் என்றும், பைக்கை விற்கப்போவதாக கூறி வந்த விளம்பரத்தை நம்பி, சென்னை மாங்கட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணத்தை இழந்தார். அதேபோல் கணவருக்கு பைக் வாங்கி சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த  இளம் பெண் தீபா, சூலுார் விமானப் படைத் தளத்தில், ராணுவப் படை பிரிவில் வேலை செய்து வருவதாக கூறிய லோகேஷ் என்பவரிடம் 24 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாந்துள்ளார்.

Tags : #CHEATING #MAN