உள்ளாடைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட தங்கம்.. டிரவுசரை கிழித்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து தங்கத்தை கடத்தி வர முயன்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். அவர் கொண்டுவந்த உள்ளாடையில் இருந்து தங்கம் வெளியே எடுக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொழில்நுட்ப உதவியோடு அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். இதன் மூலமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணி ஒருவர் உள்ளாடைக்குள் வைத்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயற்சித்திருக்கிறார். இதனையடுத்து அவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
பரிசோதனை
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கொண்டு வந்த உடமைகளில் சந்தேகத்திற்கு இடமாக பொருட்கள் ஏதுமில்லை. ஆனால், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உள்ளாடையை பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது, அதற்குள் தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி அவர் எடுத்து வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 24 கேரட் என்றும் அதன் எடை 301 கிராம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதன் சந்தை மதிப்பு 15.32 லட்ச ரூபாய் எனத் தெரிவித்திருக்கும் அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயணி கொண்டுவந்த உள்ளாடையில் இருந்து தங்கம் வெளியே எடுக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.