வெளில பாக்கத்தான் சாக்லேட் & சட்டை... உள்ளே இருந்த சங்கதியே வேற.. ஆடிப்போன ஏர்போர்ட் அதிகாரிகள்.. திணற வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை சர்வதேச விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் லாவகமாக பிடித்திருக்கின்றனர். அவர் கொண்டுவந்த பொருட்களில் இருந்து தங்கத்தை அதிகாரிகள் வெளியே எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்த நபர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அவருடைய உடமைகளை பரிசோதித்த போது, அதில் சாக்லேட்கள் மற்றும் புது சட்டைகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். அப்போதுதான் உண்மை வெளியே வந்திருக்கிறது.
தங்கம்
அந்த பயணி கொண்டுவந்த சாக்லெட்களில் தங்க நிறத்தில் பேப்பர் சுற்றப்பட்டிருந்திருக்கிறது. அதை ஆய்வு செய்கையில் அது தங்கத்தினால் செய்யப்பட்டது எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, பயணியின் பையில் இருந்த சட்டையையும் அதிகாரிகள் பிரித்து சோதனையிட்டனர். அப்போது, சட்டைக்குள் இருந்த அட்டையில் தங்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக அவரிடம் இருந்து 369.670 கிராம் 24 கேரட் தங்கம் கைப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 19 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர், இதே விமான நிலையத்தில் சூடானை சேர்ந்த பயணிகளிடம் இருந்து 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.