சென்னை விமான நிலையம் வந்த பயணி.. "15 வருசமா இவரை தேடிட்டு இருக்காங்களாம்".. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சோதித்த போது, அதில் வந்த பயணி தொடர்பான செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.
அப்போது, அதில் நைஜீரியாவில் இருந்து வந்த பயணி ஒருவரின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 46) என்பதும், கடந்த 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ராமலிங்கம் மீது கடந்த 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் தேடி உள்ளனர். ஆனால், போலீசிடம் சிக்காமல் வெளிநாட்டுக்கு ராமலிங்கம் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 2007 ஆம் ஆண்டு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ராமலிங்கம் அறிவிக்கப்பட்டார்.
அது மட்டுமில்லாமல், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், 15 ஆண்டுகள் தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார் ராமலிங்கம். அப்படி இருக்கையில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்ததும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 15 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
இதன் பின்னர், குடியுரிமை அதிகாரிகள் ராமலிங்கத்தை வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். மேலும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, கடலூர் தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையம் வந்து ராமலிங்கத்தை கைது செய்து அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி, தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | ஒரு காலத்துல 'Employee'..இப்போ பணக்காரர் பட்டியலில் பெயர்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்ச பெண்!!