"பொண்டாட்டியுடன் சேர்த்து வைங்க.. இல்லைன்னா".. செல்போன் டவரில் ஏறிய இளைஞர்.. டக்குன்னு போலீஸ் எடுத்த முடிவு.. பரபரப்பான சென்னை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதம்
திருவொற்றியூர் அருகே உள்ள சாத்தான்காடை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். கொத்தனார் வேலை செய்துவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், ஒன்றாக வசித்துவந்த தம்பதி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் செந்தில் குமாரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து எண்ணூர் காவல்நிலையத்தில் செந்தில் குமார் புகார் அளித்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு செந்தில் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், எந்த பலனும் கிடைக்காததால் செந்தில் குமார் கவலையடைந்திருக்கிறார். இதனையடுத்து நேற்று காலை திருவொற்றியூர் பேருந்து நிலையத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறியுள்ளார்.
சேர்த்து வைங்க
டவரில் ஏறிய செந்தில் குமார் தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்து தன்னுடைய மனைவியை சேர்த்து வைக்கும்படியும் இல்லையென்றால் இங்கிருந்து குதித்துவிடுவேன் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பரபரப்படைந்த தீயணைப்பு துறை பணியாளர்கள் இதுகுறித்து திருவொற்றியூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் செந்தில் குமாரை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது தனது மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி செந்தில் கூறவே, அவரது மனைவியை அங்கே அழைத்து வந்திருக்கின்றனர் காவல்துறையினர். இதனையடுத்து அந்த பெண் தனது கணவருடன் செல்போனில் மூலம் பேசவே, செந்தில் கீழே இறங்கி வந்திருக்கிறார். இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.