சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்துட்டு ஓட்டம் பிடித்த திருடர்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இது சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி
குற்ற செயல்களை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொள்ளை, கொலை போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றன. இதனாலேயே நகரங்களில் ஒவ்வொரு வீதியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அப்பகுதி மக்களே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சென்னையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவுக்கே ஒரு திருட்டு கும்பல் முத்தம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது.
முத்தம்
சென்னை, மடிப்பாக்கம் மற்றும் உள்ளகரம் பகுதிகளில் சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் சில மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவு ஆகியுள்ளது. மேலும், அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்த அந்நபர்கள், அதன்பிறகு செஞ்ச காரியம் தான் அந்த பகுதி மக்களை திகைப்படைய செய்திருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் ஊடுருவிய அந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த சிசிடிவி கேமராக்கள் தங்களை படம் பிடிப்பதை அறிந்த உடன் கேமராவுக்கு முன்னால் வந்து தங்களுடைய முகத்தை காட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து கேமராவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்கிறது அந்த கும்பல். இதனை கண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
புகார்
இதனையடுத்து இந்த சிசிடிவி பதிவுகளோடு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அந்த பகுதி மக்கள். இதனையடுத்து சவால் விடும் தொனியில் சிசிடிவி கேமராக்களுக்கே முத்தம் கொடுத்துவிட்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.