'2 லட்சம் கேமரா உங்கள் பெயரை சொல்லும்'... சென்னை மக்களின் நன்மதிப்போடு விடைபெறும் ஏ.கே.விஸ்வநாதன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காவல்துறை ஆணையர் என்ற பதவி இந்தியாவிலேயே மிகவும் கௌரவமான பதவியாகும். ஐபிஎஸ் அதிகாரிகள் பலருக்கும் சென்னை காவல்துறை ஆணையர் ஆக வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும். அந்த வகையில் சென்னை மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் திறம்பட பணியாற்றி இன்று விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை காவல் ஆணையராக 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார். 3 ஆண்டு 45 நாட்கள் பணியாற்றிய அவர், சென்னை மக்களால், மக்களின் ஆணையர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரது பணிக்காலத்தில் சென்னை முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா நிறுவியது, காவலன் செயலி, ஃபேஸ் டேக்கர் எனக் காவல்துறையில் பல்வேறு முறைகளை அமல்படுத்திக் குற்ற எண்ணிக்கையைக் குறைத்தார்.
அடிமட்ட காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட அவர், அவர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தார். பொங்கல் பண்டிகையின் போது காவலர் குடியிருப்புக்குச் சென்று காவல்துறை குடும்பத்தினரோடு பொங்கல் பண்டிகை கொண்டாடியது என அவர்களின் மனதில் தனக்கென நிலையான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் காவலர்கள் தவறு செய்தும் போது அதைக் கண்டிக்கவும் அவர் தவறியது இல்லை.
அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் சென்றதில் இவருக்கு நிகர், இவரே. எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல், பிரச்சனைகளைச் சுமுகமாகக் கையாள்வதால், காவல்துறை அதிகாரிகள் இவரை 'ஏ.கே.வி ஒரு கூல் காப்' என்றே போலீசார் அழைக்கிறார்கள். போலீசார் சிலர் நேரங்களில் அத்துமீறி நடக்கும் போது, போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய பல சம்பவங்கள் நடந்துள்ளது. இது சென்னை மக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு இணக்கத்தை உருவாக்கியது.
சிறப்பாகச் செயல்படும் காவலர்களுக்கு வெகுமதி கொடுத்துப் பாராட்டிய விஸ்வநாதன், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் உதவிய பொது மக்களையும் அழைத்துப் பாராட்ட ஒரு போதும் அவர் தவறியது இல்லை. காவல்துறை பணி தவிர்த்து சத்தமில்லாமல் பல சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். எந்த நேரத்திலும் யாரும் அணுகலாம் என்ற என்ற எளிமையோடு செயல்பட்ட விஸ்வநாதன் 3 ஆண்டுகள் வெற்றிகரமாகத் தனது பணியை மன நிறைவோடு செய்துள்ளார்.
சென்னை என்ற மாநகரத்தின் ஆணையர் என்ற பெரும் பதவியைப் பல ஜாம்பவான்கள் அலங்கரித்த நிலையில், சென்னை மக்களின் அன்பைப் பெற்ற விஸ்வநாதன், என்றும் சென்னை மக்களின் மனதில் நிலைத்து இருப்பார். சென்னை மக்கள் நிச்சயம் உங்களை மிஸ் செய்வார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதனிடையே சென்னையின் 106 காவல்துறை ஆணையாளராக மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சென்னைக்கு நன்கு அறிமுகமானவர். தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார்.
7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாகப் பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார். பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், தற்போது சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மிகவும் திறமையான, புலன் விசாரணையில் அதிரடியாகச் செயல்படும் மகேஷ்குமார் அகர்வால் சென்னை மக்களுக்கும், காவல்துறைக்கும் ஒரு நல்ல பாலமாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
