'80 காவலர்கள் பணியிலிருந்து விடுவிப்பு'... 'அதிரடி நடவடிக்கை'... 'டிஐஜி' முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், அதன் முதல் படியைத் திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் எடுத்து வைத்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகனுக்கு நடந்தக் கொடூர சம்பவம் பலரின் இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கானது மத்திய குற்றப் புலனாய்வு (சிபிஐ) துறையின் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் காவல்துறையில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுக்க முடியும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனது சரகத்திற்கு உட்படக் காவல்நிலையங்களில் மாற்றத்திற்கான முயற்சியைத் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கியுள்ளார். அதன்படி திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த காவலர்களுக்கு ஒரு மாத காலம் பொதுமக்களுடன் நல்லுறவை கடைப்பிடிப்பது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த பயிற்சியில் பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்வது, காரணம் கண்டறிந்து, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட (Cognitive Behavioral Therapy) பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போது பொதுமக்களுடன் நல்லுறவை கடைப்பிடிக்காதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 5 மாவட்டங்களில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக 80 பேருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுவதாகத் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். உயர் காவல்துறை அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் படி ஏறி வந்து மனு அளிக்க வேண்டாம், காவல்துறை அதிகாரிகளே கீழே வந்து உங்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள் எனப் பல நல்ல சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டைப் பெற்றார்.
அந்த வகையில் சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனின் இந்த முன்மாதிரி முயற்சி நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

மற்ற செய்திகள்
