'ரத்தக்கசிவால்' 3 முறை மாற்றப்பட்ட லுங்கி... 110 கி.மீ பயணம்... கார் ஓட்டுநர் வெளியிட்ட 'அதிர்ச்சி' தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவர்களை அழைத்து செல்லும்போதே கடுமையான ரத்தக்கசிவு இருந்தது என கார் ஓட்டுநர் நாகராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச்சென்ற தனியார் கார் ஓட்டுநர் நாகராஜ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், ''சாத்தான்குளம் காவல்நிலையத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவில்பட்டி சிறைச்சாலைக்கு இருவரையும் தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்றோம். அவர்கள் காரில் பயணம் செய்யும்போது, பின்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக ரத்தக் கசிவு இருந்தது.
ரத்தக் கசிவின் காரணமாக மூன்றுமுறை லுங்கி மாற்றப்பட்டது. ரத்தக்கசிவின் காரணமாக கார் இருக்கையில் போர்வை விரிக்கப்பட்டிருந்தது. அந்தப் போர்வை முழுவதும் ரத்தம் கசிந்தது. போர்வையைக் கடந்து, காரின் இருக்கையிலும் ரத்தக் கசிந்துள்ளது. எங்களுடன் காவலர்கள் இருவர் காரில் வந்தனர்,'' என தெரிவித்து இருக்கிறார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அரசு வாகனத்தில் அழைத்து செல்லாமல் தனியார் வாகனத்தில் ஏன் அழைத்து சென்றனர்?, ரத்தக்கசிவு இருந்த நிலையில் அரசு மருத்துவர் எப்படி சான்றிதழ் வழங்கினார்? போன்ற கேள்விகளை அவரது உறவினர்கள் எழுப்பி வருகின்றனர்.