‘இதை திறந்தால்’ 1 கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்க தயார்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்பேடு வியாபாரிகள் உறுதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளது. என்னவென்றால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் 40 ரூபாய்க்கு தர தயார் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. வெங்காயம் உரித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால் தக்காளியை வாங்க போனாலே இப்போதெல்லாம் மக்களுக்கு கண்ணீர் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்து விட்டது. நாட்டில் சில இடங்களில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையை கட்டுப்பட்டுத்த மானிய விலையில் தக்காளி விற்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் 80 ரூபாய்க்கு தான் விற்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா என்பவர் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆண்டு மே 5-ம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28-ம்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் செயல்படுகிறது. அந்த மைதானத்தில் தான் கொரோனாவிற்கு முன்பு வரை தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்பட்டு வந்தது. கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை. இந்த சமயத்தில் தக்காளி ஏற்றி வரப்பட்ட 11 லாரிகளை மைதானத்திற்குள் நிறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் மைதானத்தின் நுழைவு வாயிலை பூட்டி விட்டனர்.
இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது . இதனால் வெளிமாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும்.
இதன்மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். 1 கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்றார். எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே நாளை நீதிமன்றம் உத்தரவை பொறுத்து தக்காளியின் விலை ரூ 40 க்கு கிடைக்கலாம் என்று தெரிகிறது.

மற்ற செய்திகள்
