'கேப் விடாமல் அடித்த விஜய்யின் வக்கீல்'!.. சரமாரி கேள்விகளால்... அனல்பறந்த விவாதம்!.. சொகுசு கார் வழக்கில்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கான நுழைவு வரி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
எனினும், அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனு இன்று (27.7.2021) நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய நாராயணன், "வரிவிதிப்பை எதிர்த்து வழக்கு தொடர ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. விஜய் தொடர்ந்த வழக்கு 9 ஆண்டுகள் கிடப்பில் இருந்ததற்கு அவரா காரணம்? வரி விலக்கு தொடர்பாக 500 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது விஜய் வழக்கில் மட்டும் தனி நீதிபதி காட்டமான கருத்துகளை கூறியது ஏன்?
நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது. கடுமையாக விமர்சித்துவிட்டு அபராதம் விதித்தது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது. எல்லா நடிகர்களையும் பொத்தாம் பொதுவாக மனம்போன போக்கில் தனி நீதிபதி விமர்சித்ததை ஏற்க முடியாது" என்று கடுமையாக வாதாடினார்.
பின்னர் அரசு தரப்பில், விஜய்க்கு அபராதம் விதித்தது மற்றும் விமர்சனங்களை நீக்குவது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது என்றும், அதேசமயம், மீதம் செலுத்தவேண்டிய நுழைவு வரியை கணக்கிட்டுத் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே 20% வரியை விஜய் செலுத்தி இருப்பதால் மீதம் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பதை ஒரு வாரத்தில் கணக்கிட்டு தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விதித்த ரூ.1 லட்சம் அபராதம் உட்பட ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
