"ஏன் பொண்ணுனா தனியா போக கூடாதா"?.. நீதிமன்றம் வரை சென்று போராடி... வென்று காட்டிய 'அக்னி சிறகு'!.. வியக்கவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படும் தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை செவித்திறன் குறைப்பாடுடையோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் கலந்து கொள்ள இந்திய வீரர் வீராங்கனைகளை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்து அனுப்ப தகுதி தேர்வு வைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமீஹா பர்வீன். செவித்திறன் குறைப்பாடு உடைய இவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சமீஹா பர்வீனை, இந்திய விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் புறக்கணித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
100 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் தேர்ச்சி பெற்றதாக சமீஹா பர்வீன் கூறுகிறார். ஒரே ஒரு பெண் தான் தேர்வாகி உள்ளதால், அவருடன் ஒரு பயிற்சியாளர் மற்றும் இரு மருத்துவர்களையும் போலந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் இவரை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கண்ணீர் மல்க டெல்லியில் இருந்து திரும்பிய சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் செவித்திறன் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சமீஹா பர்வின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதையடுத்து, தகுதி பட்டியலில் 6வது இடம் பிடித்திருந்ததால் அவரது பெயர் இடம்பெறவில்லை என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6வது இடம் பிடித்திருந்தாலும் பெண்கள் வரிசையில் சமீஹா பர்வீன் தான் முதல் இடத்தில் உள்ளார் என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், செவித்திறன் குறைப்பாடு இருப்போர் பங்கேற்கும் போட்டிக்கு வீராங்கனை சமீஹா பர்வீனை அனுப்பி வைக்க வேண்டும் என விளையாட்டு மேம்பாடு ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.