"கேள்வி கேட்க நீங்கள் யார்"?.. பாஜக நிர்வாகியிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. 'நீட் தேர்வு பாதிப்பு பற்றிய ஆய்வுக்குழு செல்லுமா?.. செல்லாதா?'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் பாஜக நிர்வாகியிடம் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக-வின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரு.நாகராஜன் அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும் எனவும், நீட் தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லை எனவும், மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும் நீட் ஆய்வுக் குழு அமைப்பு இல்லை எனவும் தெரிவித்து, கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "நீட் பாதிப்பு பற்றி தமிழ்நாடு அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?" என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
