வாடகை டாக்சி ஓட்டுநர் TO அரசு ஓட்டுநர்..CMDA-வின் முதல் பெண் ஓட்டுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்.. குவியும் வாழ்த்துக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்து பிரியா. இவருக்கு பலரும் சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
Also Read | 9.5 டன் எடையில் உருவாக்கப்பட்ட அசோக சின்னம்.. நெகிழ்ச்சியுடன் திறந்து வைத்த பிரதமர் மோடி.. முழு விபரம்..!
வளர்ந்துவிட்ட இந்த சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பொறுப்புகளை பெற்று வருகின்றனர். ஆனாலும், அவர்கள் கடந்துவரும் பாதை அத்தனை எளிமையானதாக இருப்பதில்லை. குறிப்பாக குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உள்ளே சுருங்கிய பின்னர் தங்களது கனவுகளை துரத்தும் பெண்கள் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் இப்போது தங்களது திறமையின் மூலமாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர். இதற்கு அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்து பிரியா என்பவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பயிற்சி
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் இந்து பிரியா. 34 வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கும்மிடிபூண்டியில் உள்ள அரசு சாலை போக்குவரத்து நிறுவனத்தில் இவர் ஓட்டுநர் பயிற்சி பெற்றுள்ளார். இங்கு ஓட்டுநர் பயிற்சி பெற்ற 25 ஓட்டுநர்களில் இந்து பிரியா மட்டுமே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஓட்டுநர் பயிற்சி முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் டிரைவாக பணிபுரிந்திருக்கிறார் இந்து பிரியா. அதன் பிறகு, வாடகை கால் டாக்சியான உபரிலும் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். அப்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ஓட்டுநருக்கான தேர்வு நடைபெறுவதை அறிந்த இந்து பிரியா அதற்காக விண்ணப்பித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பு
CMDA என்று அழைக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. கடந்த திங்கட் கிழமை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கான 10 ஓட்டுநர்களை நியமித்து பணி ஆணைகளை வழங்கினார். அவர்களுள் இந்து பிரியா மட்டுமே ஒரே பெண் ஆவார்.
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யும் அமலாக்கத்துறையில் பணிபுரிய இருக்கிறார் இந்து பிரியா. இந்நிலையில் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.