"32 வருசமா கூண்டுல தான்".. உலகின் சோகமான கொரில்லா.. மனதை ரணமாக்கும் துயர பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்32 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள கொரில்லா குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
குரங்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் கொரில்லா உள்ளிட்ட சில வகை குரங்குகள், மனிதர்களை போலவே சில விஷயங்களை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
இதனிடையே, தாய்லாந்தில் உள்ள கொரில்லா தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் வருந்த செய்து வருகிறது.
தாய்லாந்து நாட்டில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு, ஒரு வயதே ஆன ஒரு குட்டி கொரில்லா குரங்கு ஒன்று ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. புவா நொய் (Bua Noi) என்ற பெயர் கொண்ட இந்த ஆண் கொரில்லா கொண்டு வரப்பட்ட நாள் முதல் அங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் மேல் தளத்தில் உள்ள Zoo ஒன்றில் இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.
பல வருடமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள புவா நொய் கொரில்லாவின் நிலைமையை கண்டு துயரில் இருக்கும் வன விலங்கு ஆர்வலர்களும், பீட்டா அமைப்பும் ஷாப்பிங் மாலின் உரிமையாளர்களிடம் கொரில்லாவை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் கொடுத்தால் கொரில்லாவை விடுவிக்க முடியும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொகை அதிகமாக இருப்பதால், எப்படியாவது நிதி திரட்டி ஜெர்மனியில் உள்ள புவா நொய் கொரில்லாவின் சக இனத்துடன் சேர்த்து விட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், நிதி திரட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்த கொரில்லாவும் தனி நபர் சொத்தாக இருப்பதால் அரசும் பெரிய அளவில் தலையிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றது. இருந்த போதிலும் இந்த கொரில்லாவை மீட்பதற்காக பலவேறு முயற்சிகள் தீவிரமாக அரங்கேறி வருகிறது. உலகின் சோகமான கொரில்லா என்ற பெயரும் புவா நொய் கொரில்லாவிற்கு கிடைத்துள்ளது.
32 ஆண்டுகளாக சிறையில் தவித்து வரும் கொரில்லாவை மீட்க வேண்டிய விஷயம், சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் இறுதி காலத்தில் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.