உலகின் மிக உயரமான சிவன் சிலை.. 250 கிமீ வேகத்துல காத்து வீசுனாலும் தாங்கும்.. அசரவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட்டுவந்த பிரம்மாண்ட சிவன் சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த சிவன் சிலையானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்த்வாரா நகரில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. 369 அடி உயரம் கொண்ட இந்த சிவன் சிலை 'விஸ்வாஸ் ஸ்வரூபம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலையை நாளை ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார்.
உதய்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிலையை தட் பதம் சன்ஸ்தான் நிர்மாணித்துள்ளது. சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு அக்டோபர் 29 முதல் நவம்பர் 6 வரை ஒன்பது நாட்களுக்கு மத, ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சன்ஸ்தான் அறங்காவலரும் மிராஜ் குழுமத்தின் தலைவருமான மதன் பாலிவால் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த நாட்களில் ஆன்மீக போதகர் மொராரி பாபு ராம கதையை மக்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறார்.
இந்த சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் மக்களால் பார்க்க முடியும் எனவும் இரவு நேரத்தில் சிலையின் அழகை மக்கள் ரசிக்கும் விதத்தில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த சிலை அதனை தாக்குப்பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் சிலை தெளிவாகத் தெரியும் என்று இந்த திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ் மாலி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர்,"உலகின் மிக உயரமான சிவன் சிலை இதுவாகும். இதில் லிப்ட்கள், படிக்கட்டுகள், பக்தர்களுக்கான மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. உள்ளே செல்ல நான்கு லிப்டுகள் மற்றும் மூன்று படிக்கட்டுகள் உள்ளன," என்றார்.
3 ஆயிரம் டன் எஃகு மற்றும் இரும்பு, 2.5 லட்சம் கன டன் கான்கிரீட் மற்றும் மணல் இதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சிவன் சிலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவினை ராஜஸ்தான் சுற்றுலா துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The majestic statue of Lord Shiva in Nathdwara, also known as the 'Statue of Belief', will mesmerise you every time you see it. 📸: Vishnu Gaur #shiva #statueofbelief #mesmerise #nathdwara #explorerajasthan #travelrajasthan #padharomharedes #rajasthantourism #rajasthan pic.twitter.com/y1gqzDrxWB
— Rajasthan Tourism (@my_rajasthan) October 4, 2022