புதுக்கோட்டை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு போன் மூலமாக ஆறுதல் கூறிய நடிகர் கமல்ஹாசன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் போன் மூலமாக ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தின் ஒரு பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததால் பொது மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிலர் நீர் தேக்க தொட்டி மேலே ஏறி பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் தொட்டியினுள் மனித கழிவுகளை கொட்டியது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தொட்டியை ஆய்வு செய்ததில் நீரில் கழிவுகள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், அசுத்தமடைந்த தண்ணீரை பயன்படுத்திய சிறுமி ஒருவர் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், மக்கள் நீதிமய்ய கட்சி தலைவரான கமல்ஹாசன் தொண்டர்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு போன் மூலமாக ஆறுதல் கூறினார். அப்போது, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுபோன்ற சமூக அவலங்கள் தொடர்வது வேதனை அளிப்பதாக கூறிய கமல் ஹாசன், பாதிக்கப்பட்ட நபர்கள் துணிச்சலாக போலீசில் புகார் அளித்ததையும் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
Also Read | பாலைவன பூமியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. கொண்டாடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ..!